மெட்ரோ ரயில் பணிக்காக பூந்தமல்லியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: ஆவடி காவல் ஆணையரகம் தகவல்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணி நடக்கயிருப்பதால் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு  செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:  பூந்தமல்லி பஸ் நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மிக துரிதமாக முடிக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் கரையான்சாவடிலிருந்து பூந்தமல்லி பஸ் நிலையம் வழியாக செல்ல கனரக வாகனங்களான பஸ், லாரி, டிரக்  ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.

 ஆனால் ஆம்புலன்ஸ், இலகு ரக வாகனம்,  இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரூர், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி  வழியாக பூந்தமல்லி பஸ் நிலையம்  செல்லும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் கரையான்சாவடியிலிருந்து வலதுபுறம் திரும்பி  ஆவடி சாலை வழியாக சென்று சென்னீர்குப்பம் மேம்பாலத்திற்கு முன்பு இடது புறம் திரும்பி பைபாஸ் சாலையில் சென்று பூந்தமல்லி மேம்பாலம் அம்பேத்கர் சிலை அருகே இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லலாம்.

இதுபோல் போரூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் கனரக வாகனங்கள், குமணன்சாவடியிலிருந்து வலது புறம் திரும்பி, சவீதா பல் மருத்துவக்கல்லூரி எதிரேயுள்ள மேம்பாலம் முன்பு இடது பக்கம் திரும்பி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி வழியாக பூந்தமல்லிக்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும்   குமணன்சாவடிக்கு செல்லாமல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லிக்கு செல்லலாம். ஆனால் கோயம்பேட்டியிலிருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் அரசு பஸ்கள் குமணன்சாவடி, கரையான்சாவடி, சென்னீர்குப்பம், பைபாஸ் வழியாக பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லலாம்.

மாங்காட்டியிலிருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் அரசு பஸ், தனியார் பஸ் குமணன்சாவடி, கரையான்சாவடி, சென்னீர்குப்பம், பைபாஸ் வழியாக பூந்தமல்லி செல்லலாம். எனவே மாங்காட்டியிலிருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி, சவீதா கல்லூரி, பைபாஸ் வழியாக  செல்லலாம். ஆவடி, பருத்திப்பட்டு, காடுவெட்டி வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்கள், பஸ்கள், சென்னீர்குப்பத்தில் வலது பக்கம் திரும்பி பைபாஸ் சாலை சென்று பூந்தமல்லி செல்லலாம். நசரத்பேட்டை வழியாக பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லும் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் செல்லலாம். இதில் மாற்றம் இல்லை.

நசரத்பேட்டையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி நகருக்குள் செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம். பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, மாங்காடு, ஆவடி, போரூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பாரிவாக்கம் பைபாஸ் சாலையில் வலது பக்கம் திரும்பி செல்லவேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். போக்குவரத்து  மாற்றம் குறித்த கருத்துக்களை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: