நெல்லை மாநகராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர், துணை மேயர் துவக்கி வைத்தனர்

நெல்லை: தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், நெல்லை மாநகராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், ஓராண்டு சாதனையை கொண்டாடும் வகையில் நெல்லை மாநகராட்சியில் பூங்காக்களில் 1000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த திட்டத்தை நெல்லை மகாராஜநகர் ரயில்வே கேட் அருகேயுள்ள பூங்காவில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வேம்பு, புங்கை, புளி, வேங்கை ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மேயர் பிஎம் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி பூங்காக்களில் 1000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. மேலும் நெல்லை மாநகராட்சியில் உள்ள 18 பூங்காக்களில் ரூ.27 லட்சத்தில் உடற்பயிற்சி சாதனங்கள் பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நெல்லை மாநகராட்சியில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 4 ஆண்டுகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சியை மாற்றுவோம்.

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. மேலப்பாளையம், நெல்லை மண்டலங்களில் வருகிற மே 15ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உறுதி அளித்துள்ளது. அதில் இருந்து ஒரு மாதத்தில் குடிநீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் நாராயணன், பாளை. உதவி கமிஷனர் ஜஹாங்கீர், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் சங்கரநாராயணன், கவுன்சிலர்கள் சீதா பாலன், வில்சன் மணித்துரை, இளநிலை பொறியாளர் தனராஜ், சுகாதார அலுவலர் அரசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: