வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அட்டூழியம்

ஷாஜஹான்பூர்: உத்தரபிரதேசத்தில் இரவுநேர வெட்கையால் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 75 வயதுடைய மூதாட்டி, தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை திடீரென தூக்கிக் கொண்டு அருகிலுள்ள வயல்வெளிக்கு கொண்டு சென்றார்.

பின் அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான். அடுத்த நாள் காலை வழக்கம் போல் மூதாட்டியின் அக்கம்பக்கத்தினர், அவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடிப் பார்த்த நிலையில், வீட்டில் இருந்து 400 மீ தொலைவில் உள்ள அவரது வயல்வெளியில் நிர்வாண நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த மூதாட்டியின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததால், உடனே அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கூடுதல் எஸ்பி சஞ்சீவ் கவுதம் கூறுகையில், ‘மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் 24 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். மூதாட்டியின் கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். கோடை காலம் என்பதால் வீட்டிற்கு வெளியே அந்த மூதாட்டி படுத்திருந்தார்.

அவர் தனிமையில் இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட குற்றவாளி, தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம்  செய்துள்ளான். மூதாட்டியின் அந்தரங்க உறுப்புகள் காயமடைந்துள்ளன. அதிக  ரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்ததால், மூதாட்டிக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றவாளி ஒப்புக் கொண்டான். அவனது ரத்தக்கறை படிந்த ஆடைகள், ஆதாரமாக மீட்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

Related Stories: