×

தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்து வரும் திட்டத்தில் இணைந்து பயன்பெற வகையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

சென்னை: தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்து வரும் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், கொப்பரை விலை மிகவும் குறைந்திருந்த காரணத்தினால், தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், அரவை கொப்பரைகளை (Milling Copra) விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்திட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து, 50,000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான ஒப்பதலினையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு,  தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 21 மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 06.05.2022 வரை, 2,221 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கொப்பரைத் தேங்காய் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையினைவிட குறைந்துள்ளது. இத்தருணத்தில் மாநில அரசு எடுத்துவரும் முயற்சியினை நன்கு பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி, அரவை கொப்பரைக்கு ஒன்றிய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ 105.90/- ம் பெறலாம்.  எனவே, கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, கொப்பரையை விற்று  பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியான கொள்முதல் செய்யப்படும் என்பதால், நன்கு உலர வைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் அனுப்பி வைக்கப்படும். தற்போது, தேங்காய்க்கான விலையும் வெளிச் சந்தையில் குறைந்துள்ளதால், கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் அனைவரும், மாநில அரசு எடுத்துள்ள இந்த கொப்பரைத் தேங்காய் கொள்முதல் திட்டத்தில்  இணைந்து பயனடையுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Tags : Minister ,M Kopar , Farmer, Coconut Coconut, Government, Purchase
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...