×

மைதானத்தில் பயிற்சி அளித்தபோது விபரீதம் கார் மோதி சுவர் நொறுங்கியது: தம்பதியை காப்பாற்றிய ஏர்பேக்

ஆலந்தூர்: மைதானத்தில் பயிற்சி அளித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி சுவர் நொறுங்கியது. அப்போது ஏர்பேக் திறந்ததால் தம்பதி உயிர்தப்பினர்.
சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் செய்யது (26). இவர் தனது மனைவிக்கு ஆதம்பாக்கம் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். அப்போது காரின் வேகத்தை குறைக்காமல் அங்குள்ள திருப்பத்தில் காரை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, அங்குள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள சுவர் மீது மோதி இடித்துதள்ளிவிட்டு பாய்ந்தது. இந்த விபத்தில், காரில் உள்ள உயிர்காக்கும் பலூன் விரிந்ததால் கணவன், மனைவி ஆகியோர் காயமின்றி தப்பினர். ஆனால் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த  அம்பேத்கர் சிலை பராமரிப்பு குழுவினரிடம் கார் மோதி உடைந்த சுவரை கட்டித் தருகிறோம். எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அனுப்பிவைத்தனர். ‘’விளையாட்டு மைதானத்தில் கடந்தமாதம் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அன்றுமுதல் சைக்கிள் பயிற்சி, கார் ஓட்டுனர் பயிற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்க முடியவில்லை.  எனவே, வாகனங்கள் ஓட்டி பயிற்சி எடுக்க தடை விதிக்கவேண்டும்’’ என்று ஹாக்கி, கால்பந்தாட்டம், சிலம்பாட்டம் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vibritam , On the field, training, car collision, wall, crashed
× RELATED வேலைக்கு சென்றபோது விபரீதம் சைக்கிள்...