வேலூர் கோட்டையில் பயங்கரம் வாலிபரை அடித்துக்கொன்று சடலத்தை இழுத்துச்சென்று அகழியில் வீச்சு: சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் கோட்டையில் வாலிபரை அடித்துக்கொன்று சடலத்தை இழுத்துச் சென்று அகழியில் வீசிய குற்றவாளிகளை சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் கோட்டை மைதானம் பொருட்காட்சி நடந்து வரும் இடத்தின் பின்புறம் அகழியில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கயிறு கட்டி அகழியில் இருந்து மீட்டனர். சடலமாக கிடந்தவரின் தலை மற்றும் முகத்தில் பயங்கரமாக தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. மேலும் அகழியின் கரையில் சடலத்தை இழுத்து சென்றதற்கான தடயங்கள் மற்றும் ரத்த கறைகள் இருந்தன.

இதன் மூலம் அவரை யாரோ கோட்டை மைதானத்தில் சரமாரி அடித்துக்கொன்று, சடலத்தை இழுத்துச் சென்று அகழியில் வீசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவரை கடத்தி வந்து கொலை செய்தார்களா? அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டு அகழியில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோட்டையை ஒட்டி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், வேலூரில் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? என்பதை வைத்தும் முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.  

இதில் கொலையானவர் வேலூர் ஆர்.என்.பாளையம் கே.கே.நகரை சேர்ந்த சுபைர்(24), பேக்கரி கடை தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் வேலூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: