மூன்றடைப்பு அருகே 3 மாத பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு

நாங்குநேரி: மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு பத்தினிப்பாறையை சேர்ந்தவர் பூந்துரை (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (40). இவர்களது 3 மாத பெண் குழந்தை சக்தி பிரியாவுக்கு கடந்த 2ம் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பால் அருந்தாமல் அழுது கொண்டே இருந்த குழந்தை, நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக பெற்றோர் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மறுநாள் முறைப்படி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பெண் சிசு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் தோட்டாக்குடி கிராம நிர்வாக அலுவலர் மதுபாலா அளித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப் பதிவு செய்தார்.

இதனிடையே நேற்று தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரிய வருமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: