×

ஜார்க்கண்டில் பணியில் இருந்த முதுகுளத்தூர் துணை ராணுவ வீரர் உயிரிழப்பு: சொந்த கிராமத்தில் உடல் நல்லடக்கம்

சாயல்குடி: ஜார்க்கண்ட்டில் பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த முதுகுளத்தூர் துணை ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே எம்.தூரியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (32). பட்டப்படிப்பு முடித்த இவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். ஓராண்டிற்கு முன்பு இவருக்கு, சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த சுந்தரமூர்த்தி, விடுமுறை முடிந்து சமீபத்தில் பணிக்கு சென்றுள்ளார். கடந்த 4ம் தேதி இவர், துணை ராணுவப்படை முகாம் உள்ள அறையில் தூங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் எழுந்து பணிக்கு வராததால் சக வீரர்கள் அறைக்கு சென்று எழுப்பியுள்ளனர். அப்போது சுந்தரமூர்த்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், சுந்தரமூர்த்தி குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் சுந்தரமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் ராணுவ மையத்தில் சுந்தரமூர்த்தியின் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, உடல் சொந்த ஊரான எம்.தூரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மரியாதை செய்தனர். பின்னர் அவரது உடல் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : Jharkhand , Jharkhand, paramilitary, casualty, physical well-being
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு