×

தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தலா 41% பெண்கள் உடல் பருமனால் பாதிப்பு : தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்!!

டெல்லி : இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அதில் பெண்கள் எண்ணிக்கையே அதிகம் என்று தேசிய குடும்பநலத் துறை ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கையில் கடந்த 4 ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 23% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 21ல் இருந்து 24% ஆக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 41% பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் பெண்களில் கருவுறுதல் விகிதம் 2.2ல் இருந்து 2.0 ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அதிகபட்ச கருவுறுதல் விகிதமாக 2.98 என்ற நிலை பீகாரில் இருக்கிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 38ல் இருந்து 36% ஆக குறைந்துள்ளது. வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக மேகாலயாவில் 47% மும் குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 20%மும் உள்ளது. திருமண வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யும் வழக்கம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. நாட்டில் வங்கி அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் விகிதம் 53ல் இருந்து 79% ஆக அதிகரித்து இருப்பதாக தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Delhi ,Punjab , Tamil Nadu, Delhi, Punjab, Women, Obesity, Vulnerability, National Family Health
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்