பண்ருட்டி அருகே பயங்கரம் ஓட, ஓட விரட்டி தலைமைக் காவலரை ஆயுதங்களால் தாக்கிய ரவுடிகள்: பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஓட ஓட விரட்டி தலைமை காவலரை ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரவுடிகளை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தண்டபாணி நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஆர்ச் கேட் பகுதியில் வேகமாக ஒரு காரில் வந்தவர்கள் தலைமை காவலரிடம் நாங்கள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் எங்களை வழிமறித்து, கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறினர். இதையடுத்து, மிரட்டிய மர்மநபர்கள் பைக்கில் செல்வதை பார்த்த தலைமை காவலர் தண்டபாணி, ஊர்க்காவல்படை வீரர் சுப்ரமணி ஆகியோர் அவர்களை பிடிப்பதற்காக பைக்கில் விரட்டி சென்றனர்.

 தொடர்ந்து பண்ருட்டி அருகே கீழக்கொல்லை என்ற இடத்தில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்களின் பைக் நின்றது. இதையடுத்து, அவர்களை பின்தொடர்ந்து வந்த தலைமைக்காவலர், ஊர்க்காவல் படை வீரர் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றது என கூறினர். சந்தேகமடைந்த போலீசார் பைக்கின் பெட்ரோல் டேங்கை திறக்க முயன்றனர். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி, இரும்பு ராடினை எடுத்து இருவரும் தலைமை காவலரை தாக்கினர். எதிர்த்து அவர் தாக்கியதால், மர்ம நபர்களுக்கும், தலைமை காவலருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை கண்ட ஊர்க்காவல்படை வீரர் சுப்ரமணி தப்பி ஓடிவிட்டார். இதில் தலைமை காவலரின் பைக் அடித்து நொறுக்கப்பட்டது.

 ஒருகட்டத்தில் தனி ஆளாக போராட முடியாத நிலையில், தலைமை காவலர் தப்பியோடினார். ஆனாலும் அவரை விடாமல் மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி தாக்கி உள்ளனர். இதை கண்ட ஊர் பொதுமக்கள் இருவரில் ஒருவனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து, முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிடிபட்ட நபரை அழைத்து சென்று விசாரனை செய்தனர்.  இதில் தலைமை காவலர் தண்டபாணியை பட்டா கத்தியால் வெட்டிய நபர் நெய்வேலி அருகே மேல்வடகுத்து பகுதியை சேர்ந்த வீரமணி(24), தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்(20) என்பதும், இருவரும், நெய்வேலி காவல் நிலையத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. வீரமணி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்து 15 நாட்கள்தான் ஆகிறது. இதனையடுத்து காயமடைந்த தலைமை காவலர் தண்டபாணி, ரவுடி வீரமணி ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக வீரமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: