ஒரு வருடத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒரு லட்சம் கோடி கொள்ளை: சிதம்பரத்தில் அன்புமணி பேட்டி

சிதம்பரம்:   பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. இதில் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது, சிதம்பரத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆறுகளில் தடுப்பணை கட்டினால்தான் கடல் நீர் உள்ளே புகாமல் இருக்கும். மாவட்டத்தில் உள்ள முக்கியமான 5 ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.  வெப்பநிலை தடுப்பு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

 என்எல்சிக்காக மீண்டும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப் போவதாக என்எல்சி நிறுவனம் கூறுகிறது. அதை எடுக்க விட மாட்டோம். நீட் தேர்வால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட்தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. அதனால் கிராமப்புற மாணவர்கள் படிக்க முடியவில்லை. நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அதில் விரைவில் கையெழுத்திட வேண்டும்.   நீட் தேர்வால் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி பணத்தை நீட் சென்டர்கள் கொள்ளை அடிக்கின்றன. அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக ஆளுநர் மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவருக்கு நிர்வாகம் தெரியும். அவர் தமிழக அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்றார்.

Related Stories: