சென்னை விமான நிலையத்தில் சோகம் கல்லீரல் பாதிக்கப்பட்ட பயணி திடீர் மரணம்

சென்னை: கல்லீரல் பாதிக்கப்பட்ட பயணி விமான நிலையத்தில் திடீரென மரணம் அடைந்தார்.  பீகார் மாநிலம் பாட்னா நகரை சேர்ந்தவர் சுரேந்திர சவுத்ரி (50). சுயதொழில் செய்துவந்தார். இவர் கல்லீரல் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். முழுமையாக குணமாகவில்லை. அதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மனைவி சீதாவுடன் (46) கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். மருத்துவமனையில் சுரேந்திர சவுத்திரியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர், மும்பையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர்.

இதையடுத்து சுரேந்திர சவுத்திரி, சீதா ஆகியோர் நேற்று அதிகாலை மும்பை செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலைய போர்டிகோவில் அமர்ந்திருந்தபோது திடீரென சுரேந்திர சவுத்திரி மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். பரிசோதனையில், மாரடைப்பு காரணமாக சுரேந்திர சவுத்திரி இறந்துவிட்டதாக கூறினர். உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.தகவலறிந்து விமான நிலைய போலீசார் விரைந்து வந்து சுரேந்திர சவுத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: