×

திருப்போரூர் அருகே தனியார் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், கலெக்டர் ஆய்வு

சென்னை:  திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் ஊராட்சி, அம்மாப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 100 பேர் உள்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், மற்றும் மருத்துவ துணை படிப்புகளை 500 மாணவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த மாநிலத்திற்கு சென்று திரும்பிய முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் சிலருக்கு கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.  இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் 100 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த கொரோனா பாதிப்பு 25 பேர் என உறுதி செய்யப்பட்டதால் நேற்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

கல்லூரி வளாகம், விடுதி வளாகம், மாணவர்கள் தங்கும் அறைகள், உணவகம், வகுப்பறைகள் போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்து தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசினர்.பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி. போன்று வெளி மாநில மாணவர்களால் இந்த தொற்று இங்கு வந்திருக்கலாம். இருப்பினும் கல்லூரியில் உள்ள 1000 மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப் படவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடவில்லை. 1.5 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும், 10 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை.

அதனால் வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை ஊழியர்கள் வீதி வீதியாக சென்று ஊசி போட தயாராக உள்ளனர். தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்ற நிலை இந்த தனியார் மருத்துவக் கல்லூரியிலும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது திருப்போரூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், சிறுங்குன்றம் நிலைய மருத்துவ அலுவலர் தேவி, தனியார் மருத்துவக் கல்லூரி டீன் உதித் தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Corona ,Thiruporur , Collector
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...