பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பல தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சென்னை:  நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய தி லர்கிங் ஹைட்ரா (THE LURKING HYDRA) புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.பின்னர் அவர்  கூறியதாவது:இப் புத்தகம் தீவிரவாத்திற்கு எதிரான வாதத்தை முன் வைக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்தியா மீதான போரை நிகழ்த்தி உள்ளது. 1990ம் ஆண்டு, தான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்த போது, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது. பிரதமர் மோடி 2014ல் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.

அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள். அதுமட்டுமின்றி நம் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது, ராணுவம் அதனை மிகவும் திறமையாக பாதுகாத்தது, அதற்கு மிகப்பெரிய நன்றி. புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை நம்முடைய ராணுவத்தினர் திருப்பிவழங்கினர். கடந்த சில ஆண்டுகளாக நாடு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த பிறகு அதிகளவில் சுற்றுலா பயணிகள் அங்கு வர தொடங்கி உள்ளனர். இதற்கு முன்பு அங்கு தீவிரவாதம் மட்டுமே ஓங்கி இருந்தது, ஆனால் தற்போது அதுபோன்ற சூழ்நிலை அங்கு இல்லை. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். இவர்கள் பல முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகிறார்கள். பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Related Stories: