பழங்குடியின ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: துறையூர் தொகுதி திமுக எம்எல்ஏ கோரிக்கை

பழங்குடியின ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். பேரவையில் நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் துறையூர் ஸ்டாலின் குமார் (திமுக) பேசியதாவது:பெண் கல்வி என்பது சமத்துவம் மற்றும் சமூக நீதியின் முக்கிய அங்கமாகும். பெண்களிடையே கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், நமது அரசு பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.சமூக நிலையை உயர்த்த வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள், கிராமப்புறமாக இருந்தால் 3 சென்ட் நிலமும், நகராட்சி பகுதியாக இருந்தால் 1½ சென்ட் நிலமும், மாநகராட்சி பகுதியாக இருந்தால் 1 சென்ட் நிலமும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ₹6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஆதி திராவிட நலத் துறையின் மூலமாக வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள் அந்த மக்களுக்கு அளந்து கொடுக்கப்படாமல் உள்ளது. அமைச்சர் உடனடியாக அந்த மக்களுக்கு உரிய இடத்தை அளந்து கொடுத்து, அவர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் வழியில் சாதி மத பேதம் ஒழிக்க போராடிய சமத்துவ போராளி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைத்து, அரசு விழா எடுக்க வேண்டும். அரசு பழங்குடியின உண்டு, உறைவிட பள்ளியில் பல பழங்குடியின ஆசிரியர்கள் கடந்த 5 ஆண்டு காலமாக தற்காலிக பணியில் உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பழங்குடியின ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேரவையில் இன்று...

பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பேசி, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இன்று கேள்விநேரம் கிடையாது.

Related Stories: