100 கோடி செலவில் 150 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்

* பஞ்சமி நிலத்தை பற்றிய புதிய சட்டம் இயற்றும் நடவடிக்கை ஆய்வில் உள்ளது

* வன்கொடுமை தடுப்புசட்ட வழக்குகளை முடிக்க மேலும் 4 தனியுறு சிறப்பு கோர்ட்

* பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:வெளிநாடுகளில் முதுகலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்பினை பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் முழுநேர முனைவர் ஆராய்ச்சிக்கான ஊக்கத்தொகை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்புக்கான ஊக்கத்தொகை ₹50 ஆயிரத்திலிருந்து ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டு, நடப்பு நிதியாண்டில் ₹16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இருளர் சமுதாயத்தினருக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 443 வீடுகள் ₹19.38 கோடி செலவில் கட்டித் தருவதோடு அல்லாமல், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இருளர் உள்ளிட்ட பிற பழங்குடியினர்களுக்கு ஆயிரம் வீடுகள் கட்டித் தர முதல்வர் ஆணையிட்டுள்ளார்.  

ஆதி திராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கிவரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ₹100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின்கீழ், ₹23.28 கோடி செலவில் 90 சதவிகித மானியம் வழங்கப்பட்டுள்ளது.   அழிவின் விளிம்பு நிலையிலுள்ள 6 வகை பண்டைய பழங்குடியினரான தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பனியன் மற்றும் காட்டுநாயகன் இனங்களின் மேம்பாட்டிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூழலியல் சுற்றுலா அதாவது, எக்கோ டூரிசம்  நடவடிக்கைகளுக்காக ₹2.33 கோடியும், தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கிராமத்தில் மு.பாலாடா என்ற இடத்தில் 0.5 ஏக்கர் பரப்பளவில் பழங்குடியின பெண்கள் மட்டுமே நடத்தும் சில்லறை எரிபொருள் நிலையம் இயங்கி வருகிறது.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளியில் விளையாட்டு சிறப்பு மையம்  அமைத்திட ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு. பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் 12-4-2022 அன்று இரண்டாவது முறையாக கூட்டப்பட்டது.

அக்கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விரைந்து முடித்திட ஏதுவாக 22 தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுவதுடன் புதிதாக சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படவுள்ளன.  2021-22ம் ஆண்டில் சாதி வேறுபாடுகளற்ற சமத்துவ மயான முறையை பின்பற்றி வந்த 60 கிராமங்களுக்கு ₹6 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் ₹8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசுப் பணிகளில் குறைவுப் பணியிடங்களாக மொத்தம் 10,402 கணக்கிடப்பட்டு, ஆதி திராவிடருக்கான 8,173 இடங்களுக்கும், பழங்குடியினருக்கான 2,229 இடங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் தெரிவு முகமைகள் மூலம் நிரப்பப்பட அரசாணை வெளியிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

   பஞ்சமி நிலத்தை பற்றிய புதிய சட்டத்தை இயற்ற தலைமை செயலாளர் தலைமையில் 21-7-2021 அன்று கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் புதிய சட்டம் இயற்றுவது குறித்து புதிய வரைவு சட்டமுன்வடிவு கருத்துகள் கோரப்பட்டு, சட்டம் இயற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அது தற்போது ஆய்வில் உள்ளது.நில எடுப்பு சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், அது கடந்த நிதியாண்டுகளில் சரியாக செயல்படுத்தப்படவில்லை. நில எடுப்பு சட்டம் செல்லும் என்று தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆகவே, இனி வருங்காலங்களில் அந்த தொகை முழுவதுமாக நிலமெடுப்புச் சட்டத்திற்காகவே செலவிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: