×

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் போதமலையில் புதிய சாலைகள் அனுமதி தந்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாமக்கல் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் போதமலைக்கு புதிய சாலைகளை அமைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் போதமலை, கீழுர் ஊராட்சிக்கு வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல், கெடமலை வரை, வனப்பகுதி வழியாக, புதிய சாலை அமைக்க, நில அளவீடு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலை கிராமங்களில் 3,500 பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு விளையும் பொருட்களை, மலைவாழ் மக்கள் தலையில் சுமந்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். மருத்துவ வசதி இல்லாததால் அவசர நிலையின் போது கர்ப்பிணி, நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், போதமலையில் சாலை அமைக்க உத்தரவிடும்படி திமுக மாநிலங்களவை எம்பி ராஜேஷ் குமார் தரப்பில், வெண்ணாந்தூர் ஒன்றிய திமுக கவுன்சிலரும், செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாகரன், ‘போதமலையில் சாலை வசதி இல்லாததால், மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்,’ என்றும், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அதனை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்,’ என்றும் தெரிவித்தனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து போதமலையில் சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் 2 பழங்குடியின கிராமத்திற்கும் உடனடியாக தமிழக அரசு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் போது வெட்டப்படும் மரங்களுக்கான நஷ்டஈடு தொகையை தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம்  மாநில அரசு வழங்க வேண்டும். வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தமிழக அரசு நட வேண்டும்,’ என தெரிவித்தனர்.உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையால் போதமலை பகுதியில் கீலூங்-வடுகமேலூர் இடையே 24 கிமீ, படுபட்டி-கெடமலை இடையே 11 கிமீ.க்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.



Tags : Supreme Court ,Bodhamalai , Indigenous peoples live in large numbers The Supreme Court has approved new roads in Bodhamalai
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...