×

ஜம்மு காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருக்கும் 200 தீவிரவாதிகள்: ராணுவம் எச்சரிக்கை

உதம்பூர்: பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள்  ஊடுருவ 200 தீவிரவாதிகள் தயார்நிலையில் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வரும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க, எல்லையில் பாதுகாப்பு படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாச செயல்களில் ஈடுபடுவதற்காக, பாகிஸ்தானின் எல்லைக்குள் 200 தீவிரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய ராணுவப் பிரிவின் வடக்கு கமாண்டர் உபேந்திரா திவேதி கூறுகையில், ``கடந்தாண்டு பிப்ரவரியில் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா, பாகிஸ்தான் உறுதியாக கடைபிடிக்கின்றன. அதன் பிறகு, எல்லையில் ஒன்றிரண்டு அத்துமீறல்களில் மட்டுமே பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.  உள்ளூர் மக்களின் ஆதரவு, உதவி இல்லாததால், நடப்பாண்டில் மட்டும் இதுவரை 21 தீவிரவாத ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், 200க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ காத்திருக்கின்றனர். இப்பகுதிகளில் 6 பெரிய முகாம்கள், 29 சிறிய அளவிலான முகாம்கள் செயல்படுகின்றன,’’ என்றார்.

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.



Tags : Indian ,Jammu ,Kashmir , Via Jammu and Kashmir To infiltrate the Indian border 200 militants waiting: Army alert
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...