×

மரியுபோலில் இருந்து ரஷ்ய படை விலகல்: நாளை மறுதினம் முக்கிய அறிவிப்பு

லிவிவ்: ரஷ்யா- உக்ரைன்  இடையே 70 நாட்களுக்கும் மேலாக  போர் நடந்து வருகிறது. மரியுபோல், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. மரியுபோல் இரும்பு ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதைகளில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், வீரர்கள்  பதுங்கி உள்ளனர். இரும்பு ஆலையை  மீட்பதற்காக போராடும் உக்ரைன் வீரர்கள் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரணடைய மறுத்து விட்டனர். அவர்கள் இறுதிவரை போர் களத்தில் நிற்பதாக சபதம் செய்துள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர்  கூறுகையில், ‘‘பெரும்பாலான ரஷ்ய  படைகள் மரியுபோலை விட்டு வடக்கு நோக்கி நகர்கின்றன. ரஷ்ய படைகளால் குறிப்பிட்ட அளவில் முன்னேற முடியவில்லை. டான்பாஸ் பிராந்தியத்திலும் ரஷ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

பிரிட்டன்  பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,   ‘மரியுபோல் மீது பல நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, இரும்பு ஆலை மீது தாக்குதல் நடத்துவது வரும் மே 9ம் தேதி ரஷ்ய வெற்றி தின விழாவுடன் தொடர்பு உள்ளது. மரியுபோல் முழுவதும் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் வெற்றி தின விழாவின் போது உக்ரைன் மீதான போரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அதிபர் புடின்  திட்டமிட்டுள்ளார். ்அன்றயை தினம் மரியுபோலும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது,’ என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உளவு தகவல்
கடந்த மாதம் கருங்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த ரஷ்ய போர் கப்பலான ‘மாஸ்கோவா’வை உக்ரைன் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்து, கடலில் மூழ்கடித்தது. இந்நிலையில், கருங்கடலில் இந்த கப்பல் இருக்கும் இடத்தை உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்காதான் துல்லியமாக தெரிவித்து, தாக்குதல் நடத்த வைத்தது,’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐநா வேண்டுகோள்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்  நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய இதன் பொதுச் செயலாளர் குட்டரெஸ், “உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவின் படையெடுப்பு ஐநா சாசனத்தின்படி உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடுக்கு எதிரானது. உக்ரைன், ரஷ்யா மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலக மக்களுக்காகவும் இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,” என்றார்.

Tags : Mariupol , From Mariupol Russian withdrawal: Key announcement the next day
× RELATED ‘சரணடையும் பேச்சுக்கே இடமில்லை’; ரஷ்யாவின் மிரட்டலுக்கு உக்ரைன் பதில்