டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு? அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு விசாரணை மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, டெல்லி அரசும், டெல்லி துணை நிலை ஆளுநரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில், அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வதற்கான அதிகாரம் மற்றும் திருத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டங்கள், வணிக பரிவர்த்தனை விதிகள் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி அரசு தரப்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி   ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது.  இவ்வழக்கில் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லியின் நிர்வாக சேவை அதிகார கட்டுப்பாடு தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. நிர்வாக பகிர்வு தொடர்பாக ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, சேவை அதிகார கட்டுப்பாடு தொடர்பாக வரும் 11ம் தேதி முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்வு விசாரிக்கும். இதில் வரும் 15ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,’ எனக் கூறியது.

Related Stories: