×

இந்தியாவில் மறைக்கப்பட்ட கொரோனா கொடூரம் 47 லட்சம் மரணம் கணக்கா? கதையா?: உசுப்பி விட்ட உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில்,  2 ஆண்டுகளில் 47.29 லட்சம் பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. இது ஒன்றிய அரசு கூறும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாகும். இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புள்ளி விவரத்தின் மூலம், உலகத்தின் பார்வை இந்தியாவின் மீது விழுந்துள்ளது. அதே நேரம், கொரோனா பலிகளை கணக்கிட உலக சுகாதார அமைப்பு பயன்படுத்திய கணக்கியல் ஆய்வு நடைமுறை பாரபட்சமானதா? நியாயமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளை மட்டுமே இந்த கணக்கியல் ஆய்வுக்கு அது உட்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை இந்த கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் பாதிப்பு, பலி எண்ணிக்கையில் அமெரிக்காவே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தன. தற்போது, இந்த கணக்கு ஆய்வில் இந்த நாடுகள் எதுவுமே வரவில்லை. உலக சுகாதார அமைப்பு உசுப்பி விட்டுள்ள இந்த விவகாரம், இந்திய அரசியலில் புதிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் வாதம், பிரதிவாதம், நிபுணர்களின் கருத்துகள் என தீப்பொறி பறக்கிறது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடும், அதற்கு பயன்படுத்திய கணக்கீட்டு முறையும் தவறானவை என ஒன்றிய அரசுக்கு ஆதரவாக சில சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா இறப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பின்பற்றிய வழிமுறைகளுடன் இந்தியா உடன்படவில்லை. இந்தியாவிடம் வலுவான சிவில் பதிவு அமைப்பு உள்ளது. எங்களிடம் உள்ள பதிவு, களத்திலிருந்து நேரடியான தகவல்களை மாவட்ட, மாநில நிர்வாகங்களால் உறுதிப்படுத்தி சான்றளிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டது.

ஆனால், உலக சுகாதார அமைப்பு பின்பற்றும் கணித முறை அனைத்து வகையான அனுமானங்களையும், ஊடகங்களில் வெளியாகும் உறுதிபடுத்தப்படாத தகவல்களையும் அடிப்படையாக கொண்டது. இந்தியா போன்ற வலுவான பிறப்பு, இறப்பு பதிவை செய்யும் நாடுகளுக்கு, உலக சுகாதார அமைப்பின் அனுமான கணக்கியல் மாதிரி முறை சரியாகஅமையாது. அரசு எதுவும் மறைக்கவில்லை. இதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை முறைப்படி தெரியப்படுத்துவோம்’’ என்றார்.நிதி ஆயோக்கின் கொரோனா செயற்குழு தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், ‘‘உலக சுகாதார அமைப்பின் அறிக்கை துரதிஷ்டவசமானது. கொரோனாவால் இந்தியா பொருளாதார ரீதியாக, சுகாதார அமைப்பில் அழிவை சந்திக்கும் என உலக நாடுகள் பல கணித்தன. ஆனால், ஒரே தேசமாக நாம் ஒன்றிணைந்து கொரோனாவை சிறப்பாக நிர்வகித்ததால் அது நடக்கவில்லை,’’ என்றார். ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘‘கொரோனா இறப்பு குறித்து உலக சுகாதார அமைப்பிடம் எந்த வரையறையும் இல்லை. ஆனால் நாங்கள் எல்லா தரவுகளை வைத்துள்ளோம். முறையான தரவுகள் இருக்கும் நிலையில், மாதிரி கணக்கீடுகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை,’’ என்றார்.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ‘‘உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு 3 காரணங்கள் உள்ளன. இந்தியாவிடம் வலுவான பிறப்பு, இறப்பு அமைப்பும், தகவல்களும் இருந்தும் அதை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தவில்லை. இரண்டாவது, உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்திய தகவல் பெரும்பாலும் செவிவழிச் சான்றுகள் அல்லது ஊடகங்களில் வெளியான உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து வந்தவை. அந்தத் தரவை வைத்து மதிப்பிடுவது சரியானது அல்ல, அடுத்ததாக கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் இந்தியா மிகவும் தாராளமாக உள்ளது, அது மிகவும் வெளிப்படையான உள்ளது. எனவே, அதிகப்படியான கொரோனா தொடர்பான இறப்புகள் இருந்தால், அவை பதிவு செய்யப்பட்டிருக்கும், மக்கள் இழப்பீடுக்கு முன் வந்திருப்பார்கள்,” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த மரண கணக்கு சரிதான் என்று வாதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன் வைத்துள்ளன. குறிப்பாக, இந்தியாவில் முதல் மற்றும் 2வது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இவை குற்றம்சாட்டி உள்ளன. அதற்கு ஆளும் பாஜ.வும் பதிலடி கொடுத்து வருகிறது. மரணங்கள் மறைக்கப்பட்ட இந்த சரச்சையில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

ராகுல் காந்தி மீது பாஜ குற்றச்சாட்டு
பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின்  நற்பெயரை கெடுக்க ராகுல் பலமுறை முயற்சித்துள்ளார். இதற்கான செயல்களின் மூலம் அவர், இந்தியாவின் பெயரை தான் கெடுத்துள்ளார். ஆகவே உலக சுகாதார அமைப்பின் டேட்டா (தகவல்கள்), காங்கிரசின் பேட்டா (காங்கிரசின் மகன் ராகுல்) மீது தான் தவறு உள்ளது,’’ என்றார்.

அனைத்து கட்சி அடங்கிய விசாரணை ஆணையம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
‘கொரோனா இறப்புகளை குறைத்துக் காட்டுவது, ஒன்றிய அரசு இழப்பீடு வழங்குவதில் இருந்து தப்பிப்பதற்கான  ஒரு வழியா? என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். அரசு கூறுவது போல் 4.8 லட்சம் பேர் இல்லை. அறிவியல் பொய் சொல்லாது. ஆனால், மோடி சொல்கிறார். அன்பானவர்களை இழந்த குடும்பங்களை மதிக்கவும். அவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கிடுங்கள்,’ என கூறி உள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், ‘மோடி அரசு உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை இந்தியாவை தலைகுனியச் செய்துள்ளது. தொற்றுநோயின் தவறான நிர்வாகத்தை பாஜ அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்பட்ட மரணங்கள், தடுப்பூசிகள் விநியோகச் சங்கிலி உடைந்து போனது போன்ற காரணங்களை ஆய்வு செய்ய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கொரோனா கமிஷன் அமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

* நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நாடு முழுவதும் 3,545 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 94 ஆயிரத்து 938.
* தற்போது 19,688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 2.

Tags : India ,Uzuppi World Health Organization , The hidden corona atrocity in India 47 lakh deaths Account? Story ?: Uzuppi World Health Organization
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!