மோடியிடம் பாடல் பாடிய சிறுவன் குறித்து கிண்டல்: காமெடி நடிகர் மீது குழந்தைகள் ஆணையம் புகார்

புதுடெல்லி: பிரதமர் மோடியிடம் பாடல் பாடிய சிறுவன் குறித்து கிண்டல் செய்த காமெடி நடிகர் மீது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புகார் கொடுத்துள்ளது. சமீபத்தில் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய  வம்சாவளியினரின் சிறுவன் ஒருவர், தேசபக்தி பாடல் ஒன்றை பாடினார். பிரதமர் மோடி, அந்த சிறுவனை பாராட்டினார். இந்த வீடியோ பதிவு ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா என்பவர், சிறுவன் பாடிய பாடலை  கொச்சைப்படுத்தி, மற்றொரு பாடலை இணைத்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுவனின் தந்தை  வெளியிட்ட பதிவில், ‘ஏழை சிறுவனை உங்களது இழிவான அரசியலுக்கு எதற்காக  பயன்படுத்துகின்றீர்கள்; இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நடிகர் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்குமாறு டுவிட்டரின் குறைதீர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘தங்களது அரசியல் சித்தாந்தங்களைப் பரப்புவதற்காக, சிறார்களைப் பயன்படுத்துவது சிறார் நீதிச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் ஆகியவற்றை மீறுவதாகும்.

இதுபோன்ற விளம்பர நோக்கங்களுக்காக சிறுவர்களை பயன்படுத்துவது, அவர்களின் மன நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, குணால் கம்ரா வெளியிட்ட வீடியோவை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அவரது அதிகாரப்பூர்வ கணக்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளது.

Related Stories: