தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் ... வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி : அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர்  கயல்விழி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித்திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு,

*200 நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.

*500 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

*வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும்.

*ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு மானிய உதவித் திட்டம்: 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சார்பாக 90 சதவீத வைப்புத் தொகை செலுத்தி இலவச மின் இணைப்பு வழங்க, 1,827 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.28.65 கோடி செலவிடப்பட்டுள்ளது.

*புதிய மைன் மோட்டார் வாங்க 1800 ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் 200 பழங்குடியின விவசாயிகள் என மொத்தம் 2000 பேருக்கு ஒரு விவசாயிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*2 பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மானியத்துடன் கூடிய கடன் (நிலம் வாங்கும் திட்டம் – நில மேம்பாட்டுத் திட்டம்) நிலமற்ற ஆதி திராவிட மகளிரை நில உடமையாளர்களாக்கி அவர்களது சமூக நிலையினை உயர்த்திட சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும்.

*மகளிர் இல்லாத குடும்பங்களில் ஆண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

Related Stories: