×

கிரீன் லீப் ஓட்டலுக்கு சீல்: தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சை: கிரீன் லீப் ஓட்டலுக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களில் சாப்பிடுவது வழக்கம். அதேபோல், நேற்று இரவு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களான பிரவீன்,  பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை தஞ்சை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று மாணவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அந்த உணவு விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான குழு சோதனை  நடத்தியது. இதில் உரிமம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிரீன் லீப் ஓட்டலுக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Tanjore District ,Food , Seal for Green Leap Hotel: Tanjore District Food Security Officers Action
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...