பாஜக ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ விவகாரம்!: விசாரணை குழுவிடம் யாரும் புகார் தரவில்லை என அண்ணாமலை தகவல்..!!

சென்னை: பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராகவன் பற்றிய பாலியல் சர்ச்சை வீடியோ வெளியான விவகாரத்தில் கட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் கே.டி.ராகவன் பற்றிய பாலியல் சர்ச்சை வீடியோ வெளியானது. இதையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பாதிக்கப்பட்டவர் பாஜகவை சேர்ந்தவர் என அந்த வீடியோவில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

கட்சியில் மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்ற அவர், பாதிக்கப்பட்ட பெண், பாஜக விசாரணை குழுவிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் விசாரணை குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மலர்கொடிக்கு போதுமான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, பாஜக எப்போதுமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் என்று கூறினார்.

Related Stories: