புதுவை அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து-கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறல்

திருபுவனை : புதுச்சேரி திருபுவனை அடுத்த திருபுவனை பாளையத்தில் மறு சுழற்சி முறையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.  இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் மூலப்பொருள் வைத்திருக்கும் இடத்தில் மின்கசிவு காரணமாக திடீரன தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த குடோனுக்கும் பரவியது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களும் பற்றி எரிந்தன.

 இதுகுறித்து திருபுவனை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருபுவனை, திருக்கனூர், மடுகரை, வில்லியனூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4  வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வீரர்கள் விரைந்து வந்தனர். மாலை 4 மணியிலிருந்து தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தண்ணீரால் அணைக்க முயற்சித்தும் முடியவில்லை.

சோடியம் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டுகள் மற்றும் ஆர்கனோமெட்டாலிக் சேர்மங்கள் அடங்கிய ரசாயன நுரையால் அணைக்கும் தொழில்நுட்பம் புதுச்சேரி தீயணைப்பு துறையிடம் இல்லாததால் பணியில் தொய்வு ஏற்பட்டது.  தொடர்ந்து, 4 மணி நேரத்துக்கு மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும்  தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால் விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடியுள்ளனர். பின்னர் அவர்களும் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 இந்த தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலத்தால் சூழ்ந்து காட்சியளிக்கிறது.  திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீ விபத்தை காண குவிந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தகவலறிந்த  வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன், எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.  இதற்கிடையே தொழிற்சாலையில் மேலும் தீ பரவாமல் இருக்கும் வகையில் மற்ற குடோனில் இருந்த மூலப்பொருட்களை தொழிலாளர்கள் வேகமாக அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories: