×

திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் திடீரென மணல் ஏற்றிய மாட்டு வண்டிகளை மறித்து மக்கள் முற்றுகை

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் கோவிலடி பகுதியில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றியதால் கோவிலடி ஊராட்சி தலைவர் ஜெகதீசன், திமுக. பிரமுகர்கள் ரமேஷ், சுக்காம்பார், சத்தியமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் அவர்களை தடுத்து முற்றுகையிட்டனர்.

இது குறித்து ஜெகதீசன் தெரிவிக்கையில், அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதை தாங்கள் தடுத்துள்ளோம். அரசு முறையாக குவாரி அமைத்து அவர்களுக்கு அனுமதி வழங்கிய பிறகு மணல் எடுத்தால் நாங்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டோம் என்றார். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பூதலூர் தாசில்தார் பிரேமா, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் வசந்தி, தோகூர் எஸ்ஐ அய்யா பிள்ளை, அகரப்பேட்டை ஆர்ஐ பிரியா, விஏஓக்கள் ஆனந்த், செல்வராஜ் உள்ளிட்டோர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜா அவர்களிடம் கேட்டபோது குவாரி அமைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் மெசேஜ் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் எங்களுக்கு அனுமதி வழங்க முடியவில்லை. ஆனால் வந்தவர்களுக்கு மணல் வழங்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தாசில்தார் பிரேமா தெரிவிக்கையில், எஸ்எம்எஸ் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது மணல் வழங்க இயலவில்லை. மணல் ஏற்றிய வண்டிகள் மணலை இறக்கிவிட்டு செல்லும்படியும் பின் முறையான அனுமதி பெற்று தங்களுக்கு முறையாக மணல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆனால் மாட்டுவண்டி உரிமையாளர்கள், எங்களிடம் செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் ஒரு மாட்டு வண்டிக்கு ஆயிரம் வீதம் பெற்றுக்கொள்வதாகவும், அனுமதி சீட்டும் தருவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்தே மணல் ஏற்றி உள்ளோம். எங்களால் மணலை கொட்டிவிட்டு செல்ல முடியாது என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாசில்தார் பிரேமா, முறையான எஸ்எம்எஸ் வந்த பிறகு அவர்களுக்கு சட்டப்படி மணல் வழங்கலாம். முறையற்ற முறையில் மணல் வழங்க அனுமதிக்க முடியாது. மாட்டுவண்டியில் உள்ள மணலை இறக்கிவிட்டு மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். தவறாக அறிவித்த செயற்பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kollidam river ,Thirukattupalli , Thirukkattupalli: More than 100 cows were found yesterday morning in the Koviladi area of the Tiruchinamboondi Kollidam river near Thirukkattupalli.
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி