×

உத்தரகண்டில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை

கிருஷ்ணகிரி :  உத்தரகண்ட் மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உடலுக்கு, 24 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசன்(எ)சந்திரன்(56). இவர், கடந்த 1986ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 765 படையில் ஜெனரல் ரிசர்வ் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தார். 36 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய இவர், தற்போது உத்தரகண்ட் மாநிலம் டார்சுலா தாலுகாவில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி இரவு, பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான சவுளூர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர்கள் பைரப்பன், செந்தில்குமார் ஆகியோர் எடுத்து வந்தனர்.
நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன், அவருக்கு சொந்தமான நிலத்தில் தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர், அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் எஸ்ஐ. செந்தில்குமார் தலைமையில் 10 காவலர்கள் இணைந்து, 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். மரணமடைந்த ராணுவ வீரர் காசனுக்கு ரஞ்சனி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags : Uttarakhand , Krishnagiri: Police paid homage to the body of Krishnagiri soldier in Uttarakhand.
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்