கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக்!: குமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை..பயணிகள் தவிப்பு..!!

குமரி: கேரள மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரளாவில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள்ளாக ஊதியம் வழங்கக்கோரி 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை.

கேரளாவில் போக்குவரத்து கழக பணியாளர்களின் போராட்டம் காரணமாக நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் மாவட்ட எல்லையான களியக்காவிளை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் மற்றும் கேரளாவில் எடத்துவா கோவில் திருவிழாவிற்கு மக்கள் செல்ல முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகினர்.

இதேபோல தென்காசியில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையும், எர்ணாகுளம், ஆலப்புழல் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் கேரள மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். கேரள மாநிலத்திற்கு வாழ்வாதாரத்திற்கு செல்லும் சிறு வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: