×

ஒடிசாவில் நடந்த திருவிழாவில் தோடர் பழங்குடியினரின் எம்ராய்டரிக்கு முதலிடம்

ஊட்டி : ஒடிசாவில் நடந்த 9வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை திருவிழாவில் நீலகிரி வாழ் தோடர் பழங்குடியின எம்ராய்டரிக்கு தேசிய அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. 75வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த 9வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை திருவிழாவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்ட கேடயத்தினை கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஒடிசா மாநிலத்தில் கடந்த மாதம் 23 முதல் 29ம் தேதி வரை நடந்த 9வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை திருவிழாவில் தமிழக பழங்குடியினர் சார்பாக ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் மூலம் ஜான்சிராணி, ரேணுகா, பிரித்திகா ஆகிய 3 தோடர் இனத்தைச் சார்ந்த பழங்குடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு விற்பனை முகவர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்விழாவில், 62 பழங்குடியினரின் கைவினை பொருட்களும், 200 விற்பனை அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ஒரு அங்காடி தமிழக பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் அழிவின் விளிம்பில் உள்ள ஆறு பண்டைய பழங்குடியினர்களில் ஒருவரான தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும். பூத்தையலுக்கு (எம்ராய்டரி) தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கேடயம் பழங்குடியினர் ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.  இதே போன்று பழங்குடியின மக்களாகிய நீங்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இது போன்று நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Odisha , Ooty: Nilgiris Todar Tribes at the 9th National Level Tribal Handicrafts Festival in Odisha
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...