மே 10ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புயல்... தமிழ்நாட்டில் அடுத்த நாட்களுக்கு வெயில் கொளுத்தும் : வானிலை நிலவரம்!!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. இருப்பினும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று உருவானது. இதன் காரணமாக இப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வரும் எட்டாம் தேதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, மே 10-ம் தேதி ஆந்திரா- ஒடிசா  கடற்கரையை ஒட்டிய பகுதியில் புயல் மையம் கொள்ளும் என்றும் இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்றும் வெப்பநிலை உயர்வால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும்  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதனிடையே, தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: