நெல்லை : நெல்லை டவுன் பகுதியில் நேற்று இரவு வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தநிலையில் 2 குழுக்கள் அமைத்து நாயை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை டவுன் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் நேற்று இரவு அப்பகுதியில் தென்பட்டவர்களை எல்லாம் கடித்தது. டவுன் காட்சிமண்டபம், மாதா கோயில் தெரு, வேணுவன குமாரர் தெரு, டவுன் கோடீஸ்வரன் நகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாய் வெறி பிடித்து கண்ணில் பட்ட 10க்கும் மேற்பட்டவர்களை கடித்தது.
இதையடுத்து பேட்டை தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று நாய் கடிப்பட்டவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டவுன் ஜெயப்பிரகாஷ் தெருவை சேர்ந்த சக்தி கணேஷ் (15) உள்பட சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 5வயது சிறுவன் ஒருவரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் வெறிநாயை விரட்டியடிக்கும் முயற்சியில் பொதுமக்களே களம் இறங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்டு நாய்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார். மேலும் வெறிநாயை இரவோடு இரவாக பிடிக்க மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் 2 குழுக்களையும் நியமித்தார். இக்குழுவினர் இரவில் அங்குமிங்கும் உலா வந்தும் வெறிநாய் சிக்கவில்லை. நெல்லை மாநகர பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகவும், அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு மேயரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் இன்று (6ம் தேதி) முதல் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.என்ன காரணம்?டவுன் ேகாடீஸ்வரன் நகரில் சமீபகாலமாக குரங்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குரங்குகள் நாய்களை கடிப்பதால், நாய்கள் வெறிபிடித்து அலைவதாக கூறப்படுகிறது. எனவே நாய்களை பிடிக்கிற கையோடு ேகாடீஸ்வரன் நகரில் குரங்குகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.