×

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நார் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு!: தண்ணீர் செந்நிறத்திற்கு மாறியதால் விவசாயிகள் வேதனை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நார் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விளக்கேத்தி பகுதியில் கீழ் பவானி பிரதான கால்வாய் அருகே தென்னை நார் கழிவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கயிறு உற்பத்திக்கான நார் பிரித்தெடுக்கப்பட்ட பின் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளை பதப்படுத்தி பேக்கிங் செய்து கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு பதப்படுத்தும் போது, அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் செந்நிறத்திற்கு மாறி காட்சியளிக்கின்றன.

நார் தொழிற்சாலைகளில் கழிவுகளை பிரித்தெடுக்க ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாக நிலத்தடி நீர் செந்நிறத்திற்கு மாறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று விளக்கேத்தி பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். செந்நிறத்தில் மாறியுள்ள இந்த தண்ணீரை தான் மக்கள் வேறு வழியின்றி பயன்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். விதிகளை மீறி கீழ் பவானி கால்வாய் அருகிலேயே 15 ஆண்டுகளுக்கும் மேல் நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.


Tags : Erode District ,Sivakiri , Sivagiri, Fiber Factory, Groundwater, Red
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!