×

புதுச்சேரி நகராட்சியில் பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரியில் பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24-ம் தேதி புதுச்சேரி  வந்தபொழுது, புதுச்சேரியில் சட்டவிரோதமாக 1,000-கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும்  புதுச்சேரி கரிகலாம்பாக்கம் என்ற ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் இந்த வழக்கானது தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபொழுது, பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேனர்களை அகற்றியதற்கான செலவுகளை சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என கூறி, ஜெகன்நாதன் தரப்பில் மீண்டும் ஒரு மனுதாக்கல் அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள், மகாதேவன் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபொழுது, புதுச்சேரியில் சட்டவிரோதமாக 2500 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒப்பந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் வாதிடப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர் வைத்தல் என்பது, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு எதிரானது என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அகற்றியது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி நகராட்சிக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.            


Tags : Chennai High Court ,Puducherry , Puducherry, Banner, Removal, Chennai High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...