×

வேலூர் அருகே சோகம் பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை

வேலூர் : வேலூர் அருகே பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் அடுத்த அரியூர் குப்பம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் ஏழுமலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பரிமளா தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மோனிஷ்(16). இவர் வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பரிமளா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது மோனிஷ் வீட்டின் அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து பரிமளா கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் மோனிஷ் தூக்கு மாட்டிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், மாணவர் தேர்வுக்கு படிக்காமல் பயத்தில் இருந்ததாகவும், தாய் திட்டியதால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.நேற்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vellore , Vellore: Police are investigating a student who committed suicide near Vellore for fear of the Plus 2 general examination.
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!