×

நீட் விலக்கு மசோதா.. காலம் கடந்தாவது ஆளுநர் புரிந்து கொண்டுள்ளார் என்பதற்காக நன்றி : திமுக நாளேடு

சென்னை: நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர். என் ரவிக்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி நன்றி தெரிவித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. ஆளுநருக்கு நன்றி என்று முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், பேரவையில் கேள்வி நேரம் முடிந்து முதலமைச்சர் எழுந்து பேசத் தொடங்குகிறார்கள் என்றால், சபையே உற்றுக் கவனிக்கும். மிகமிக முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் தொற்றிக் கொள்ளும். நேற்றைய தினம் சட்டப்பேரவையில் திடீரென எழுந்த முதலமைச்சர் அவர்கள், நீட் தொடர்பாக பேசத் தொடங்கினார்கள். என்ன அறிவிப்பாக இருக்கும் என்றுதான் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“ஆளுநர் அவர்களின் செயலாளர் சில மணித்துளிகளுக்கு முன்னால் என்னைத் தொடர்புகொண்டார். இந்த பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ‘நீட் விலக்கு மசோதாவை’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஒன்றிய உள் துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை ஆளுநர் அவர்களின் செயலாளர் எனக்குத் தெரிவித்துள்ளார்” - என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னதும் சபையே அதிர மேசைகள் தட்டி உறுப்பினர்கள் வரவேற்றார்கள்.

‘இந்தத் தகவலுக்காகத் தானே காத்திருந்தோம்’ என்பதைப் போல உறுப்பினர்களின் முகங்கள் மலர்ந்தன. “நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்டமுன் வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்” என்று தனது அடுத்த இலக்கையும் அதே அவையில் முன்மொழிந்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமர்ந்தார்கள்.

இந்த அடிப்படையில் மிகமிக முக்கியமான நாளாக நேற்றைய தினம் அமைந்துவிட்டது. 228 நாட்கள் நடத்திய போராட்டம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த நான்காவது மாதம் - அதாவது 13.9.2021 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 3.2.2022 அன்று அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் மேதகு ஆளுநர் அவர்கள்.

இந்த தகவல் கிடைத்த இரண்டாவது நாளே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் கூட்டினார்கள். அக்கூட்டத்தின் முடிவின் படி - அதற்கு மூன்று நாள் கழித்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடந்தது. அதே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மறுபடியும் ஆளுநருக்கு 8.2.2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தேவையில்லை. அந்த அதிகாரம் அவரிடம் இல்லை. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது ஒன்றுதான் ஆளுநரின் பணியாகும். அதனை அவர் செய்தாக வேண்டும் என்பதற்காக இந்த 228 நாட்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் என்பவை, மிகப்பெரிய தொடர் படையெடுப்பு போல அமைந்திருந்தது. இறுதி இலக்கை அடையும் வரை அதனை விடாமல் வலியுறுத்திக் கொண்டே இருப்பது என்ற முடிவோடு இருந்தார் முதலமைச்சர். அவரது விடாமுயற்சியின் பயன் தான், ஆளுநர் எடுத்த முடிவாகும்.

இத்தகைய முடிவை ஆளுநர் அவர்கள் முன்கூட்டியே எடுத்திருக்கலாம். ஏனென்றால், நீட் விலக்கு சட்டமுன்வடிவு என்பது ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உகந்த அரசியல் நிலைப்பாடு அல்ல. தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளின் கல்வி உரிமையோடு தொடர்பு உடையது. ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையோடு தொடர் புடையது. ஒரு தேர்வின் மூலமாக பலரது கல்விக் கனவைச் சிதைக்கிறது. சி.பி.எஸ்.இ. கல்வி முறையைத் தவிர மற்ற கல்வி முறையில் படித்தவர்களை பலவீனப்படுத்துகிறது. லட்சங்களைச் செலவு செய்து தனிப் பயிற்சி நிறுவனங்களில் படிக்க வசதி வாய்ப்புகள் அற்றவர்களை புறந்தள்ளுகிறது.

இரண்டு ஆண்டு - மூன்று ஆண்டு என்று ஆண்டுகளை ஒதுக்கி தேர்வுக்குத் தயாராகும் வழி இல்லாதவர்களது வாசலை அடைக்கிறது. அந்த தேர்வில் வெற்றி பெறுவதற்காக - முறைகேடுகளில் ஈடுபட்டு சிறைக்குப் போன மாணவர்களும், பெற்றோர்களும் இன்னமும் முடங்கிக்கிடக்கிறார்கள். அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்காக - தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவியரின் முகங்கள் நம் மனக்கண் முன் நிழலாடுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இத்தகைய ஒரு தேர்வு தேவையா? என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் நீட் விலக்கு மசோதா ஆகும்.

அரசியல் எல்லைகளைக் கடந்து கனிவுடன் கவனிக்க வேண்டிய மசோதா அது. அதனை காலம் கடந்தாவது ஆளுநர் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார் என்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்கூட்டியே எடுத்திருந்தால் கடந்த 228 நாட்களின் கசப்பைத் தவிர்த்து இருக்கலாம்.

ஒரு உதாரணம் .... 2019 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு இது - இந்தி மொழியை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாஒரு கருத்தை வெளியிட்டார். உடனடியாக மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் செப்டம்பர் 20 அன்று நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். அப்போது ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித் அவர்கள். உடனடியாக தி.மு.க. தலைவரை, ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சில விளக்கங்களை அளித்தார் புரோகித்.

‘நீங்கள் நினைக்கும் பொருளில் அமைச்சர் அமித்ஷா பேசவில்லை’ என்று ஆளுநர் சொன்னார். ‘இந்த விளக்கத்தை மத்திய அரசின் சார்பில் சொல்வீர்களா?’ என்று தி.மு.க. தலைவர் அவர்கள் கேட்டார்கள். ‘மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்துதான் நான் சொல்கிறேன்’ என்றார் ஆளுநர். சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும், ‘போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம்’ என்று அறிவித்தார் தி.மு.க. தலைவர். எனவே, ஆளுநர்களின் செயல்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. இப்படித்தான் நிகழ்வுகளை நோக்க வேண்டும்.

இப்போது ‘நீட் விலக்கு மசோதாவை’க் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக - ஆளுநரின் இந்த நடவடிக்கை நன்றிக்குரியது. அவருக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஆளுநர் அவர்களுக்கு நன்றி!,எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Bill ,Governor , Need, Exemption, Bill, Governor
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...