காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 46,864 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

செங்கல்பட்டு: கொரோனோ தொற்றால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. அதில் 6516 மாணவர்கள், 7002 மாணவிகள் என மொத்தம் 13,518 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 50 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில், தலா ஒரு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு முதன்மை தேர்வு கண்காணிப்பாளர், கூடுதலாக பணியாற்ற ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டனர். மேலும் மாவட்டம்  முழுவதும் 50 துறை அலுவலர்களும், கூடுதலாக 6 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். தேர்வு நடைபெறும் 50 மையங்களில் 85 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தனித்தேர்வர்களுக்கு 3 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், பஸ் வசதிகளும் செய்யபட்டன. இதையொட்டி, கலெக்டர் ஆர்த்தி அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 280 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் 91 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில், 15,673 மாணவர்கள், 17,673 மாணவிகள் என, 33,346 பேர்  தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களுக்கு 5 மையங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பொதுத்தேர்வில், ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் ஆகியவை நடக்காமல் இருக்க, 190 பறக்கும் படையினர், 91 முதன்மை கண்காணிப்பாளர்கள், 19 உதவி கண்காணிப்பாளர்கள் என 300 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்தவேளையில் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா உடன் இருந்தார்.

Related Stories: