×

சவாலில் எதிர்க்கட்சிகள் தோல்வி துணை சபாநாயகர் தேர்தல் ராஜபக்சே அரசு வெற்றி: 148 எம்பி.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்

கொழும்பு: இலங்கையில் துணை சபாநாயகர் தேர்தலில் ராஜபக்சே அரசு சார்பில் ராஜினாமா செய்தவரே மீண்டும் நிறுத்தப்பட்டு, 148 எம்பிக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றதால், ஆளும் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.  
 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மாதம் 9ம் தேதி முதல் நாடு முழுவதும் மாணவர்கள், தொழிற்சங்கங்கள், புத்த துறவிகள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவிகயா, முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் கோத்தபய, மகிந்த ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூடியது. அரசு மீது அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதுகுறித்து அனைத்துக் கட்சிகள் ஆலோசித்து, அதை எப்போது விவாதத்துக்கு கொண்டு வருவது முடிவெடுத்து விவாதம் நடத்துவார்கள். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் காலமாகும். இதனால், இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த வாரம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

கடந்த ஏப். 30ம் தேதி முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், அக்கட்சி உறுப்பினரான  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய துணை சபாநாயகர் தேர்தல் நேற்று நடந்தது. ராஜபக்சே அரசு சார்பில் ராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மீண்டும் துணை சபாநாயகராக களம் இறக்கினர். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் போட்டியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவாக 148 பேரும், எதிராக 65 பேரும், 3 பேர் செல்லாத வாக்குகளை பதிவு செய்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன அறிவித்தார். இந்த வாக்கெடுப்பில் அதிருப்தி எம்பிக்கள் 40 பேர் பங்கேற்கவில்லை. துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டிய ‘அரசாங்க கைக்கூலி’ என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். துணை சபாநாயகர் தேர்தல் வெற்றி பெற்றதன் மூலம் ராஜபக்சே அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

* நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் வெற்றி உறுதி
109 எம்பி.க்கள் ஆதரவு மட்டுமே ராஜபக்சே அரசுக்கு உள்ளதால், பெரும்பான்மையை இழந்ததாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தன்னால் ராஜினாமா செய்ய முடியாது என ராஜபக்சே தொடர்ந்து கூறி வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முடிந்தால் வென்று காட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் கோத்தபய சவால் விட்டார். இதை நிரூபிக்கும் வகையில் துணை சபாநாயகர் தேர்தலில் ராஜபக்சே வென்று காட்டி உள்ளார். இதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே அரசு வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

Tags : Deputy Speaker ,Rajapaksa government , Opposition parties lose in challenge Deputy Speaker election Rajapaksa government wins: Proves majority with 148 MPs support
× RELATED காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10...