பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு: பிரான்ஸ் - இந்தியா ஒப்பந்தம்

பாரீஸ்: ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதி நாளன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து  இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக கடந்த 2ம் தேதி புறப்பட்ட பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அங்கு அந்த நாட்டின் அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து பேசினார். 2வது நாள் டென்மார்க் சென்ற அவர்  அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரெடிரிக்சனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.  

அதன் பின்னர் அங்கு நடந்த நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். சுற்றுப் பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று முன்தினம் பிரான்சுக்கு சென்றார். அவரை தனது எல்சீ அரண்மனையில் அதிபர் இமானுவேல் மேக்ரன் கட்டி  தழுவி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினர். இது தொடர்பாக மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், எனது நண்பர் அதிபர் இமானுவேல் மேக்ரனை சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி என்றும்  இருதரப்பு  மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் பேசினோம் என்றும் தெரிவித்தார்.  இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

* இந்த சந்திப்பின்போது, விரைவில் இந்தியாவுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்ததாக  ஒன்றிய வெளியுறவு துறை தெரிவித்தது.

* இந்தியா-பிரான்ஸ் நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் எழுந்து வரும் நிலையில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

* ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான போரில் ஏராளமான அப்பாவி மக்கள கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். போரை உடனே நிறுத்தி தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

* ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

* ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை செயல்படுத்துவதற்கு இருநாடுகளும் கூட்டு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் அனைத்து  முயற்சிகளுக்கும் பிரான்ஸ் ஆதரவு அளிக்கும்.

* என்எஸ்ஜி எனப்படும் அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தில் இந்தியா உறுப்பினராக்குதற்கான முயற்சியிலும்  ஆதரவு அளிக்கப்படும் என்று பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.

* இந்தியா வந்தார்

ஐரோப்பிய நாடுகளில் செய்த 3 நாள் சுற்றுப் பயணம் முடிந்த நிலையில், நேற்று காலை பிரதமர் மோடி இந்தியா வந்து சேர்ந்தார்.

Related Stories: