ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 7 சட்டப் பேரவை தொகுதி: மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்தது. ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழான ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் தொகுதி சீரமைப்பு ஆணையம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆணையத்தின் பதவி காலம்  மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆணையத்தின் பதவி காலம் மேலும் 2 மாதங்களுக்கு (மே 6ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டது. ஜம்முவில் கூடுதலாக 6 சட்டப்பேரவை தொகுதிகளை ஏற்படுத்தவும், காஷ்மீரில் கூடுதலாக ஒரு தொகுதியை ஏற்படுத்தவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம், சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ஜம்மு மண்டலத்தில் 43 ஆகவும் காஷ்மீர் மண்டலத்தில் 47 ஆகவும் உயரும். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பலம் 83ல் இருந்து 90 ஆக உயரும். இதில் முதன்முதலாக பழங்குடியினருக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் இந்த பரிந்துரைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான  ஆணையம் தனது பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கும். பின்னர், ஒன்றிய அரசு அரசாணை  வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: