×

இப்போதைக்கு கட்சி இல்லை 3 ஆயிரம் கிமீ பாத யாத்திரை: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

புதுடெல்லி: அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போதைக்கு அரசியல் ஆர்வலர் மட்டுமே, அரசியல் கட்சி தொடங்கும் திட்டமில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இரண்டு ஆண்டுகள் துணை தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர், தேர்தல் வியூக நிபுணராக மாறினார். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து, வெற்றி பெற செய்தார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சிகளின் பார்வை பிரசாந்த் கிஷோர் மீது விழுந்தது. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின் காங்கிரஸ் தந்த வாய்ப்பை பிரசாந்த் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், பீகாரில் அவர்  தனியாக அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்போதைக்கு அரசியல் கட்சி எதுவும் தொடங்கப்போவது இல்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பீகாரில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘பொதுமக்களை சந்திக்கும் வகையில் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று பீகாரின் சம்பாரனில் இருந்து  3000 கி.மீ. பாதயாத்திரையை தொடங்குகிறேன். இந்த பாதயாத்திரையின் போது பொதுமக்களை நேரடியாக சந்தித்து பேசுவேன். இப்போதைக்கு தனியாக அரசியல் கட்சி எதையும் தொடங்கவில்லை. பீகாரில் அரசியல் ஆர்வலராக என்னை பார்ப்பீர்கள். பீகாரில் சமீபகாலத்துக்கு எந்த தேர்தலும் வரப்போவதில்லை. அதனால் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த எந்த திட்டமும் தற்போது இல்லை. அரசியல் கட்சி தொடங்கப்பட்டால் அது எனது பெயரின் கீழ் இருக்காது. ஆனால், அதை அமைத்தவர்களுடன் ஒத்துழைப்பேன்,” என்றார்.

* அரசியல் கட்சி துவங்குவது இப்போதைக்கு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினாலும், 3000 கி.மீ. பாதயாத்திரையாக சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்பதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் திட்டம் இருக்கும் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

Tags : Prasanth Kishore , No party for now 3 thousand km foot pilgrimage: Prasanth Kishore announcement
× RELATED 2024 மக்களவை தேர்தல் வியூகம்: காங்கிரஸ்...