சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறுவில் இருந்து 5 டிஎம்சி தண்ணீர் திறப்பு: இன்றிரவு பூண்டி நீர்த்தேக்கம் வந்தடையும்

திருமலை: சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்றிரவு பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம். ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திர அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கண்டலேறு அணை செயற்பொறியாளர் விஜய்குமார், தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் ஹரி நாராயணா ஆகியோர் உத்தரவுப்படி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக இந்த ஆண்டு 5 டிஎம்சி தற்போது திறக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு மொத்தம் 2,500 கனஅடி தண்ணீர் செல்லும். ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட விவசாயிகளுக்கான பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும்போது வழங்கவும் தயாராக உள்ளோம். அதற்கேற்ப தண்ணீரின் இருப்பு உள்ளது. தற்போது, திறக்கப்பட்டுள்ள தண்ணீர், நாளை (இன்று) இரவு அல்லது நாளை மறுதினம்(நாளை) அதிகாலை சென்னை பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

Related Stories: