×

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி ஜெய்ஷ் இ தீவிரவாதிகளின் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் எல்லைதாண்டி சுரங்கப்பாதை அமைத்திருந்ததை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் நடக்கும் அமர்நாத் யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டு இருந்த அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் தீவிரவாதிகள் சதி திட்டத்தை முறியடித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜம்மு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பாவில் உள்ள சக் பக்விரா எல்லைப்புறக்காவல் நிலையத்தின் கீழ் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படையின் டிஐஜி எஸ்பிஎஸ் சந்து கூறுகையில், ‘‘சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டதன் மூலமாக அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையிலான பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சுரங்கப்பாதை பாகிஸ்தான் பகுதியில் இருந்து தோண்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் பகுதியில் 21 மணல் மூட்டைகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. சர்வதேச எல்லையில் இருந்து 150 மீட்டர் மற்றும் எல்லை வேலியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இந்த சுரங்கபாதை தோண்டப்பட்டு இருந்தது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி தான் கடந்த 22ம் தேதி இரண்டு பாகிஸ்தான் ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் ஜம்முவிற்குள் நுழைந்து சிஐஎஸ்எப் முகாம்  மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

* டிரோன் தாக்குதலை முறியடிக்க சாதனம்
இந்தாண்டு நடக்கும் அமர்நாத் யாத்திரையின்போது தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தக் கூடும் அபாயம் உள்ளது. இதை முறியடிப்பதற்காக, அமர்நாத் யாத்திரை பாதைகள், பக்தர்கள் தங்குமிடங்கள், முக்கிய சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் எதிர்ப்பு சாதனங்களை அமைக்க பாதுகாப்பு படைகள் முடிவு செய்துள்ளன.

Tags : Jaish ,Amarnath , Discovery of a tunnel by Jaish-e-extremists plotting to disrupt the Amarnath pilgrimage
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்