×

இன்று முகூர்த்த நாள் எதிரொலி காய்கறி, பூ விலை உயர்வு: கிலோ கனகாம்பரம் ரூ.400க்கும் விற்பனை

சென்னை: இன்று  முகூர்த்த நாள் என்பதால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் லாரி, மினி வேன் ஆகிய வாகனங்களில் தக்காளி, பீன்ஸ், வெண்டை மற்றும் அவரை போன்ற காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. நேற்று முன்தினம் 600 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்தன. இந்நிலையில், நேற்று மொத்த காய்கறி கடைகளுக்கு விடுமுறை என அறிவித்த நிலையில், 100 வாகனங்களில் 1000 டன் காய்கறிகள் வந்துள்ளன.

நேற்று முன்தினம் ஒரு கிலோ பெங்களூரு தக்காளி ரூ.50க்கும், கேரட் ரூ.35க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.40க்கும், பீட்ரூட் ரூ.25க்கும், பீன்ஸ் ரூ.70க்கும் சவ்சவ் 20க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த காய்கறிகள் கடைகளுக்கு விடுமுறை என்பதால், காய்கறி விலைகள் நேற்று உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ரூ.60க்கும், கேரட் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், கத்தரிக்காய் ரூ.40க்கும், சவ்சவ் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், அவரைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. உருளைக்கிழங்கு ரூ.20ல் இருந்து ரூ.30க்கும், முட்டை கோஸ் ரூ.20ல் இருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போன்று, பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நேற்று காலை ஒரு கிலோ மல்லிகை ரூ.360க்கு விற்பனையானது. சம்பங்கி ரூ.90க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், சாமந்தி ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் அனைத்து பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை குறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர்  எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று விடுமுறை  என்பதால், 100 வாகனங்களில் 1000 டன் காய்கறிகள்  வந்துள்ளன. நேற்று முன்தினம் விலையைவிட, ரூ.10 கூடுதலாக காய்கறிகள்  விற்கப்பட்டன.

பொதுமக்கள் நலன் கருதி நேற்று சிறு, மொத்த காய்கறி கடைகள், பழம், பூக்கடைகள் இயங்கின.  எனவே, அவர்கள் தடையின்றி காய்கறிகளை வாங்கி சென்றனர்.’’ என்றார். பூக்கள் விலை குறித்து, பூ மார்க்கெட் தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘வெயில் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 24 வாகனங்களில் பூக்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட மல்லி நேற்று முகூர்த்த நாள் என்பதால், ரூ.360க்கு விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாள் முடிந்தவுடன் பூக்களின் விலை பழைய நிலைமைக்கு குறைந்துவிடும்.’’ என்றார்.

Tags : Echoes of today's glorious day Vegetable and flower prices rise: Kilo Kanakambaram sells for Rs.400
× RELATED புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது