×

போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய பேச்சுவார்த்தை வரும் 12ம்தேதி நடைபெறுகிறது: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய பேச்சுவார்த்தை வரும் 12ம்தேதி நடைபெற உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர்  பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டி தருகிறது. ரூ.5600 கோடி லாபம் ஈட்டி தருகிறது. இந்த துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை உறுப்பினர் ஜெகன்மூர்த்தி சொன்னார்.

அதை எல்லாம் சீர் செய்வதற்காக தான் முதல்வர் இந்த துறையில் தகவல் தொழில் நுட்பத்தை புகுத்தி சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிப்பில் வர இருக்கிறது. தமிழகத்தில் இருக்கிற வாகனங்களில் 80 சதவீதம் இருசக்கர வாகனங்கள்.  அரசு போக்குவரத்து கழகம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களின் சீரான பயணத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனால் மொத்தம் ரூ.48000 கோடி கடன் இந்த துறைக்கு உள்ளது.

21000க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. ஒரு லட்சத்து 20ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கே உறுப்பினர் பலர் அவர்களின் ஊதிய உயர்வு பற்றி பேசினார்கள். அதற்கெல்லாம் ஒரு விடை காண்பதற்கு 14வது ஊதிய பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் இங்கே வைத்தார்கள். வருகிற 12ம்தேதி அந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்ற நல்ல செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். சிற்றுந்து திட்டம் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். அதை செயல்படுத்த கேட்டனர். அதன்படி, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நமது முதல்வர் சிற்றுந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான வழிகளை எடுத்துள்ளார்.

வாகனங்களில் ஒட்டப்படுகிற ஒளிர்வு பட்டை(ஸ்டிக்கர்) அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்றார். முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருக்கிற அனைத்து நிறுவனங்களுக்கும் அந்த சேவையை வழங்குவதற்கான உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார். ஒரிரு நாளில் அந்த அறிவிப்பு வெளியாகும். சில்லறை விற்பனையில் டீசல் அரசு பேருந்துகளுக்கு வாங்குவது குறித்து பேசினார்கள். டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.102 என்றாலும், மொத்தமாக வாங்கினால் ஒரு லிட்டர் ரூ.115க்கு கொடுக்கிறார்கள். அது என்ன கணக்கு என்றே தெரியவில்லை. அரசு பேருந்துகளுக்கு மொத்த விலையில் வாங்கினால் மக்கள் மீது தான் சுமை ஏறும். எனவே, கூடுதல் விலைக்கு விற்பதால் தான் சில்லறை விற்பனையில் வாங்க வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் ஒரு லிட்டருக்கு ரூ.75 பைசா குறைவாகத் தான் வாங்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள். புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.   

சென்னையில் எங்கும் ஏறலாம்.. எங்கும் இறங்கலாம் திட்டம்
* சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும்.
* சென்னை தீவுத் திடலில் உள்ள டிரைவ்-இன் உணவகம் ரூ.50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வண்ணம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் மேம்படுத்தப்படும்.

* கிராமிய விளையாட்டு விழா
‘‘வீர விளையாட்டு விழா’’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

* கைவினைப் பொருட்களுக்காக சென்னை விழா
தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த, ‘சென்னை விழா’ என்ற  பெயரில் ஒரு தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்.

* மலர்,கனிகள் கண்காட்சி
சென்னையில் மலர், காய்கனிகள் மற்றும் பனைப் பொருட்கள் கண்காட்சி - கோடை விழா, ரூ.25 லட்சம் செலவில் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து நடத்தப்படும்.

வண்டலூர், கோவளத்தில் குயிக் பைட்ஸ்..
* மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது - தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
* வண்டலூர், கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ‘‘குயிக் பைட்ஸ்” என்னும் சிறு உணவகம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். சுற்றுலா பயண அமைப்பாளர்கள் மற்றும் பயண  ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாத் துறையில் பதிவுகள் மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

* திருப்பதி தரிசன டிக்கெட் ரூ.1000
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவுக்கு சீக்கிர தரிசன நுழைவுச் சீட்டுகளை ரூ.150ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தொகுப்பு  சுற்றுலா தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து தொடங்கப்படும்.

Tags : pay ,Minister ,Sivasankar , The 14th pay talks of transport workers will take place on the 12th: Minister Sivasankar's announcement
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...