இல்லை என்பதை அழகாக சொன்ன ஒரே மந்திரி: அமைச்சர் பொன்முடிக்கு துரைமுருகன் பாராட்டு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கீழ்வைத்திணான்குப்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி (புரட்சிபாரதம்) பேசுகையில், ‘‘கே.வி.குப்பம் பகுதிக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில் ‘‘கே.வி.குப்பம் வேலூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதனால் இப்போது கல்லூரி தொடங்கும் நோக்கம் இல்லை. தொடர்ந்து ஜெகன் மூர்த்தி பேசுகையில், ‘‘அமைச்சர் பதில் தொகுதி மக்களுக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது,

இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘‘அந்த தொகுதியில் அரசு கல்லூரி உள்ளது. காலியிடங்கள் உள்ளது. அதை முதலில் நிரப்ப வேண்டும். உங்களை சந்திக்க வருபவர்களை அந்தக் கல்லூரியில் படிக்க சொல்லுங்கள். தற்போது அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என்றார்.

உடனே குறுக்கீடு செய்த அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ‘‘இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே மந்திரி இவர் ஒருவர் தான்’’ என்றார்.

இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘‘இந்த பதிலை சொல்ல சொன்னவரே நீர்வளத்துறை அமைச்சர் தான். குடியாத்தம், காட்பாடியில் கல்லூரி இருக்கு என சொன்னார். அதைத்தான் சொன்னேன். இருந்தாலும் என்னை பாராட்டி உள்ளார், அதற்கு நன்றி’’ என்றார்.அமைச்சர்களின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories: