கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்த்தேகத்திற்கு 500 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருவது திருவள்ளூர் அடுத்த பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தலா 300 கன அடி வீதம் திறந்தவிடப்பட்டுள்ளது. மேலும், கோடைக்காலம் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீர் இருப்பு குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி 28.67 அடியும், 1450 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு அரசின் வேண்டுகோளை ஏற்று ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 500 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பு என்பது படிப்படியாக உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளது. இந்த நீரானது அடுத்து வரும் 2 நாட்களில் ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயிண்ட் வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: