×

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதியபோது 3 முறை மயங்கி விழுந்த மாணவி: காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்

வேலூர்: காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவி அடுத்தடுத்து 3 முறை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அதிகாரிகள் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு எழுத வந்திருந்த வண்டறந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், காலை 10 மணியளவில் திடீரென மேஜையில் மயங்கிய நிலையில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவருக்கு பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதி உள்ளார்.

இந்நிலையில் 11.30 மணியளவில் அந்த மாணவி மீண்டும் மயங்கி விழுந்துள்ளார். தேர்வறை கண்காணிப்பாளர் முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது தேர்வை பார்வையிட தாசில்தார் ஜெகதீசன் அந்த பள்ளிக்கு வந்தார். தகவலறிந்து அந்த மாணவியை தனது காரில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று அரைமணி நேரத்தில் அந்த மாணவி மீண்டும் தேர்வறைக்கு வந்து தேர்வை எழுத தொடங்கினார். மதியம் 12.15 மணியளவில் மீண்டும் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்போது வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக பறக்கும்படை அதிகாரிகள் அவர்களது காரில் மாணவியை அழைத்துக்கொண்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவிக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலம் சரியில்லை எனக்கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் காரணமாக தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Katpadi Government Girls High School , Student fainted 3 times while writing Plus 2 exam at Katpadi Government Girls' High School: taken to hospital by car
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...