×

மதுரையில் கட்டுமான பணிகளுக்காக எய்ம்ஸ்க்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1,627 கோடி கடன் அனுமதி

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் நிறுவனம் ரூ.1,627 கோடியை அனுமதித்துள்ளது. இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது பற்றி நாடாளுமன்றத்தில் விதி எண் 377ன் கீழ் கேள்வி எழுப்பி இருந்தேன். ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளருக்கு கடந்த ஜன. 20ம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். தற்போது ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் குமார், ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோரிடமிருந்து கடிதங்கள் வந்துள்ளன.

இந்த இரு கடிதங்களில், ‘‘டிசம்பர் 2018ல் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டது. ஜப்பான் நிறுவனமான ஜிகாவின் கடனுக்கான ஆயத்த ஆய்வுப்பணிக்குழுவினர், கடந்த பிப்ரவரி 2020ல் மதுரைக்கு வந்தனர். 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப்பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.1,977.8 கோடியாக உயர்த்தப்பட்டது. ஜிகாவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021, மார்ச் 26ல் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1,977.8 கோடிகளில் ஜிகா நிறுவன கடன் ரூ.1,627 கோடிகளாக இருக்கும்.

மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். 2026, அக்டோபருக்குள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் தெரிவிக்கிறது. வளாகச் சுற்றுச்சுவர் உள்ளிட்ட முன் முதலீட்டு பணிகள் 92 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மை ஆலோசகரை முடிவு செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிலேயே தற்காலிக வளாகம், தமிழக அரசின் ஆலோசனை அடிப்படையில், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு எய்ம்ஸ்க்கான எம்பிபிஎஸ் படிப்பு துவக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவு மதிப்பீடுக்கான நிர்வாக ஒப்புதல் நடைமுறை முடிவடைகிற தருவாயில் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர். ஜிகா நிறுவனம் தனது கடன் தொகையைான ரூ.1,627 கோடியை முழுமையாக மதுரை எய்ம்சுக்கு அனுமதித்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Japan ,AIIMS ,Madurai , Japan approves Rs 1,627 crore loan to AIIMS for construction in Madurai
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...