14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. இருப்பினும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக கரூர், காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது. தேன்கனிக்கோட்டை 80 மிமீ, செட்டிகுளம் 60 மிமீ, பாடலூர், திருச்சி 50 மிமீ மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

மேலும் இடி, மின்னல் நேரத்தில் தரைக் காற்று மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் வீசும். இதுதவிர நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

Related Stories: